அமித்ஷா நாளை திருச்சி வருகை; ட்ரோன்கள் பறக்கத்தடை; பாஜக முக்கிய பிரமுகர்கள் திருச்சியில் முகாம்

Feb 12, 2026 - 16:34
 0  41
அமித்ஷா நாளை திருச்சி வருகை; ட்ரோன்கள் பறக்கத்தடை; பாஜக முக்கிய பிரமுகர்கள் திருச்சியில் முகாம்

அமித்ஷா நாளை திருச்சி வருகை; ட்ரோன்கள் பறக்கத்தடை;
பாஜக முக்கிய பிரமுகர்கள் திருச்சியில் முகாம்

    திருச்சிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்புக்காக பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருக்கின்றது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;
   நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி 13.02.2026 மற்றும் 14.02.2026 ஆகிய நாட்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
   எனவே 13.02.2026 மற்றும் 14.02.2026 ஆகிய நாட்களில் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகின்றது.
  மேற்கண்டவாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தனி விமானம் மூலம் நாளை(பிப்.13) திருச்சிக்கு வருகிறார்.
   தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் அவா், அன்றிரவு திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வெடுத்துவிட்டு, மறுநாள் (பிப்.14) திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் காரைக்கால் செல்கிறார்.
   காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கி, கார் மூலம் காரைக்கால் நகராட்சித் திடலுக்கு முற்பகல் சென்று, அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும், வான் வழியாக மீண்டும் திருச்சி வரும் அவா் விமானம் மூலம் சேலம் செல்கிறார் என்றனர்.
   அமித்ஷா திருச்சி வருகையை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் (13, 14) ஆகிய தேதிகளில் மத்திய அமைச்சா் பியூஸ் கோயல், இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக முக்கிய பிரமுகர்கள் திருச்சியில் முகாமிட்டுள்ளனர்.
   மேலும், திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் பாரதம் அடுத்த தசாப்தம் என்ற பெயரில் தொழிலதிபர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெறுகிறது. இதில் மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், எல்.முருகன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இருந்து பா.ஜ.க. சார்புடைய தொழிலதிபர்கள் மற்றும் பல்துறை வல்லுநர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0