ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்; வட மாநில தொழிலாளி மீது சட்டபூர்வ நடவடிக்கை - மாவட்ட நிர்வாகம்
திருச்சி: ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்; வட மாநில தொழிலாளி மீது சட்டபூர்வ நடவடிக்கை - மாவட்ட நிர்வாகம்
அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் முகாம் அலுவலகங்களில் அனுமதியின்றி ரீல்ஸ் எடுப்பது மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றுவது சட்டப்படி குற்றமாகும். அரசு அலுவலகங்களின் பாதுகாப்பு மற்றும் நற்பெயரைக் குலைக்கும் இச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மற்றும் துறைரீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட மாநில இளைஞர் ஒருவர் ரீல்ஸ் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு இருக்கும் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியரின் அறையில் ஆட்சியரின் இருக்கையில் அமர்ந்து இளைஞர் ஒருவர் ரீல்ஸ் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
த.வெ.க அரசு பொறுப்பேற்றது முதல் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் என பலர் அலுவலக ரீதியாக செல்லும் இடங்களில் எல்லாம் ரீல்ஸ் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்த ஆட்சியை ரீல்ஸ் ஆட்சி என விமர்சிக்கும் அளவிற்கு தமிழக முதல்வர் விஜய்யின் செயல்பாடு உள்ளது என எதிர்க் கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதுவும் ஆட்சியர் அறைக்குள்ளே இளைஞர் ஒருவர் ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரத்திக்தயாள் முகாம் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை மூலமாக கட்டிட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பட மாநில தொழிலாளர் ஒருவர் தவறுதலாக முகாம் அலுவலகத்தில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு குறித்து விசாரணை நடத்தி மேற்படி நபர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் மிக முக்கிய ஆவணங்கள், ஃபைல்கள் வைக்கப்பட்டுள்ள, ஒரு மாவட்டத்தின் தலைமை நிர்வாகியின் ரூமுக்குள், சாதாரண தொழிலாளி ஒருவர் புகுந்து விளையாடிய அந்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு அந்த காணொளி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி ஒட்டுமொத்த அரசு வட்டாரங்களிலும், பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றது.
முன்னதாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பராமரிப்புப் பணிகள், எந்த அதிகாரிகள் கண்காணிப்பும் இன்றி நடைபெறுகிறதா? வெளி மாநில ஆட்கள், ஆட்சியர் அலுவலகத்தில் எந்த பாதுகாப்பு கெடுபிடிகளும் இன்றி பணியாற்றி வருவதாக இதன் மூலம் அறியப்படும் நிலையில் அரசின் அனைத்து வித கோப்புகளுக்கும் யார் பாதுகாப்பு என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0