காலி முகத்திடலில் புதிய கின்னஸ் சாதனை படைத்த பரதநாட்டியக் கலைஞர்கள்: பத்தாயிரம் சலங்கைகள் அதிர்ந்தன  

Jun 18, 2026 - 16:20
 0  15
காலி முகத்திடலில் புதிய கின்னஸ் சாதனை படைத்த பரதநாட்டியக் கலைஞர்கள்: பத்தாயிரம் சலங்கைகள் அதிர்ந்தன  

காலி முகத்திடலில் புதிய கின்னஸ் சாதனை படைத்த பரதநாட்டியக் கலைஞர்கள்: பத்தாயிரம் சலங்கைகள் அதிர்ந்தன  

இலங்கை கலை வரலாற்றில் என்றும் அழியாத ஒரு பொன்னெழுத்துப்பொதிந்த நாளாக மாற்றியிருந்தது “சங்கமம் 2026” எனும் பெயரில் நடைபெற்ற 5000 பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே மேடையில் அணிதிரண்டு, 10,000 கால் சலங்கைகளை ஒரே தாளத்தில் ஒலிக்கச் செய்து உலக சாதனை படைத்த இந்நிகழ்வு என்றால் அது மிகை அல்ல.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் அயராத முயற்சியினாலும், வழிகாட்டலாலும் ஏற்பாடு செய்யப்பட்ட “சங்கமம் 2026” பரதநாட்டியப் பெருவிழா, கொழும்பு காலி முகத்திடலில் கின்னஸ் உலக சாதனையை வெற்றிகரமாகப் படைத்துள்ளது.

நம் நாட்டில் அண்மையில் நடைபெற்ற ‘அயலக தமிழர் மாநாட்டில்’ இலங்கை அமைச்சர் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, அவரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பேரில், சங்கமம் குளோபல் அகடமி மற்றும் சங்கமம் லியா ஹாலிடேஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, தினேஷ்குமாரின் நெறியாள்கையில் இந்த பிரம்மாண்ட நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் இத்துறையில் படைக்கப்பட்ட உலக சாதனையானது வெறும் 416 கலைஞர்களின் பங்கேற்புடன் மட்டுமே அமைந்திருந்த நிலையில், தற்போது அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஒட்டு மொத்தமாக 4,988 பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே மேடையில் பங்கேற்று, முந்தைய சாதனையை மிக பிரம்மாண்டமான முறையில் முறியடித்து புதிய உலக சாதனையைப் பதிவு செய்துள்ளனர். காலி முகத்திடலில் இயற்கை அலைகளின் ஓசையையும் மிஞ்சும் வகையில், இந்த 4,988 கலைஞர்களின் கால்களில் கட்டப்பட்டிருந்த 9,976 சலங்கைகள் ஒரே தாளத்தில், ஒரே நேர்த்தியில் ஒலித்து உலகையே வியப்பில் ஆழ்த்தின.

தமிழ் கலாசாரத்தின் தொன்மையையும், பரதநாட்டியத்தின் நுணுக்கங்களையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் இந்நிகழ்வு மிக நேர்த்தியாக அமைந்திருந்தது.

இந்நிகழ்வின் நடுவராக ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) வருகை தந்திருந்த கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் நடுவர் ரிஷி நாத் (Guinness World Records Adjudicator Mr. Rishi Nath) கலந்துகொண்டு, இந்த சாதனையை நேரில் ஆய்வு செய்து இதற்கான உத்தியோகப் பூர்வ முடிவுகளை அறிவித்தார்.

“நீங்கள் அனைவரும் இப்போது அதிகாரப்பூர்வமாக வியக்கத்தக்க சாதனையாளர்கள்” என்று பாராட்டிய அவர், புதிய உலக சாதனைக்கான சான்றிதழை நிகழ்வின் பிரதம அதிதியான பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களிடம் மேடையில் வைத்து கொடுத்தார்.

சான்றிதழைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர், இலங்கை மண்ணில் தமிழ் பாரம்பரியக் கலையின் பெருமையை உலக அரங்கிற்கு கொண்டு சேர்த்துள்ள இத்தருணம், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தமிழர்களுடைய கலை, கலாசாரம் மற்றும் பண்பாட்டை உலகறியச் செய்யும் நோக்குடனேயே இந்த உலக சாதனை நிகழ்வு இன்றைய தினம் கொழும்பு காலி முகத்திடலில் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பல சாதனைகளைத் தொடர்ந்து நிகழ்த்தி வரும் இலங்கை அரசாங்கத்தின் மற்றுமொரு முக்கிய அங்கமாக இந்த கின்னஸ் சாதனை நிகழ்வு அமைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இத்தகைய சர்வதேச அளவிலான பிரம்மாண்ட நிகழ்வுகளின் மூலம் உலக மக்கள் அனைவரது கவனமும் இலங்கையை நோக்கித் திரும்பும் என்றும் சுட்டிக் காட்டினார்.

இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் சர்வதேசப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவது கணிசமாக அதிகரித்து, நாட்டின் சுற்றுலாத்துறை மேலும் மேலும் வளர்ச்சியடைவதோடு, இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாயை அதிகரித்துக்கொள்ளவும் இது ஒரு பெரும் ஏதுவாக அமையும் என நாம் திடமாக நம்புகிறோம் என்றும் அவர் விவரித்தார்.

அதோடு, இலங்கை மாணவர்களின் திறமைகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்வதற்கான உன்னதமான வாய்ப்பாக இது அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், இன்றைய வரலாற்றுச் சிறப்புமிக்க கின்னஸ் சாதனையில் பங்கேற்று நாட்டின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய அனைத்துச் சிறார்களுக்கும், மாணவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த அபூர்வ கலைக் காட்சியை நேரில் கண்டு ரசிப்பதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காலி முகத்திடலில் திரண்டிருந்தனர். 

இலங்கையில் இத்தகையதொரு பிரம்மாண்ட கலாசாரப் புரட்சியை சாத்தியமாக்கிய பிரதி அமைச்சருக்கு, நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இவ்விழாவில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களுடன் இணைந்து, கடற்றொழில் மற்றும் நீர்வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா, பிரதி தொழில் அமைச்சர் மஹிந்தஜயசிங்க உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் சர்வதேச கலைத்துறை வித்தகர்கள் பலரும் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சலங்கை ஒலியால் அதிர்ந்த கொழும்பு காலி முகத்திடல் கடற்கரை, இலங்கைத் தமிழர்களின் கலைத்திறனுக்கும், கலாசார ஒற்றுமைக்கும் என்றும் அழியாத ஒரு சான்றாக உலக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0