ஹாட்ரிக் வெற்றியை பறிகொடுத்த அன்பில் மகேஷ்; காரணம் இதுதான்....

May 5, 2026 - 13:03
 0  408
ஹாட்ரிக் வெற்றியை பறிகொடுத்த  அன்பில் மகேஷ்; காரணம் இதுதான்....

ஹாட்ரிக் வெற்றியை பறிகொடுத்த  அன்பில் மகேஷ்; காரணம் இதுதான்....

தி.மு.க-வில் நேருவின் தீவிர விசுவாசியாக அறியப்பட்டவர், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர், மாநில பொதுக்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் அங்கம் வகித்தவர் தற்போது தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயகுமார் எனும் நவல்பட்டு விஜி.

கலைஞர் காலத்தில் இருந்து, அவர் திருச்சிக்கு வரும்போதெல்லாம் பிரமாண்டமாக ஃபிளெக்ஸ், செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து கலைஞரையே வியக்க வைத்தவர்.

கடந்த, 2016-ம் வருட தேர்தலில் இவருக்குத்தான் கே.என்.நேரு திருவெறும்பூர் தொகுதியை வாங்கி தர முயற்சித்தார். இவர்தான் வேட்பாளர்' என்று நம்பி, களத்தில் வேலையை தொடங்கினார். 

இந்த நிலையில் தான் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை தலைமை அறிவித்து அவரை வெற்றிபெற வைக்க அனைவரும் உழைக்க வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டது. தான் வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்த நிலையில் தமக்கு போட்டியாக மகேஷ் வந்தது விஜிக்கு நெருக்கடியை தந்தது. 

இருப்பினும் 2016 தேர்தலில் மகேஷ் பொய்யாமொழி சுமார் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதேநேரம், தொகுதியில் நடைபெறும் அனைத்து கோயில் திருவிழா, குடமுழுக்கு விழாக்களில் அன்னதானம் போடுவது, இளைஞர்கள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகளுக்கு செலவழிப்பது என்று தொகுதியில் இளைஞர்கள் சக்தியை கவர்ந்து வைத்திருந்தார் நவல்பட்டு விஜி.

இதனால் அவ்வப்போது மகேஷ் பொய்யாமொழிக்கும் நவல்பட்டு விஜிக்கும் கருத்து மோதல்கள் மேலோங்கின. இந்த மோதல் சமூக ஊடகங்களில் வேகம் எடுத்தது.

 இதன் விளைவாக 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமக்கு எதிராக தொகுதியில் உள்ளடி வேலைகளை செய்தார் நவல்பட்டு விஜி என்ற குற்றச்சாட்டை தலைமைக்கு பல்வேறு ஆதாரங்களுடன் அனுப்பி வைத்தார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இதனால், நவல்பட்டு விஜியின் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் பதவி பறிபோனது. அதேநேரம் திமுகவின் விசுவாசியாகவும், கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளராகவே திமுக கரை வேட்டியுடன் எங்கும் பவனி வந்தார். இருந்தாலும் தலைமையின் ஆதரவால் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதியில் தனி ஆவர்த்தனம் செய்தார் . 

இந்நிலையில்தான், 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற வகையில் அன்பில் மகேஷ் பொய்யா மொழியை வீழ்த்த, அவருக்கு எதிரியான நவல்பட்டு விஜியை தங்கள் கட்சிக்கு கடைசி நேரத்தில் இழுத்து, அவரை வேட்பாளராக்கியது த.வெ.க தலைமை.

திருவெறும்பூர் நவல்பட்டு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் நவல்பட்டு விஜி 

பிரசார களத்தில் பெரிதாக பல்வேறு பகுதிகளுக்கும் செல்லாமல், செலவுகள் பெரிதளவு செய்யாமல் விஜய்யின் உருவ பொம்மையை தன் அருகே நிறுத்தி விஜய் தான் வேட்பாளர் வாக்களியுங்கள் என பிரச்சாரம் செய்தது நவல்பட்டு விஜிக்கு ப்ளஸ் ஆக அமைந்தது. 

அன்பில் மகேஸ் கடந்த 2016, 2021 ஆகிய இரு தேர்தல்களில் வென்றிருந்த நிலையில், இந்தமுறை வென்றால் ஹாட்ரிக் வெற்றிபெறலாம் என்று நினைத்தார். ஆனால், 89,837 வாக்குகள் பெற்று நவல்பட்டு விஜி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றார். 

கடந்த இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி 81,132 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

நவல்பட்டு விஜிக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் இடையே 8,705 வாக்குகள் மட்டுமே வித்தியாசம். அதேநேரம் மகேஷ் பொய்யாமொழி தமது சீனியர்கள் பலரையும் சரிவர அனுசரித்து செல்லாததும் இந்த தோல்விக்கு காரணம் என்கின்றனர் திமுகவினர். மொத்தத்தில் திமுக உட்கட்சி பூசல்களால் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பின்னடைவை சந்தித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2021 இல் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொகுதியில் பிரச்சாரம் செய்ததை காட்டிலும் 2026 தேர்தலில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த நிலையிலும் விசில் சுனாமியில் வீழ்ந்து இருக்கிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 1
Sad Sad 2
Wow Wow 0