தேர்தல் வாக்குறுதிக்கு முரணான கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு ஏமாற்றமே - பி.ஆர்.பாண்டியன் 

Jun 16, 2026 - 15:32
 0  29
தேர்தல் வாக்குறுதிக்கு முரணான கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு ஏமாற்றமே - பி.ஆர்.பாண்டியன் 

தேர்தல் வாக்குறுதிக்கு முரணான கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு ஏமாற்றமே - பி.ஆர்.பாண்டியன் 

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் விஜய் இன்று அறிவிப்பு வெளியிட்டார்.

 இந்த அறிவிப்புக்கு எதிர்வினை ஆற்றிய தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது;

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் இன்றைய முதலமைச்சர் ஜோசப் விஜய் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பெற்ற கடன் முழுமையும் தள்ளுபடி செய்வோம்.

மற்றவர்களை போல் விவசாயிகளை ஏமாற்ற மாட்டோம். என்றெல்லாம் விளக்கம் அளித்தார். இதனை நம்பி விவசாயிகள் வாக்களித்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் தலைமையிலான புதிய அரசின் கடன் தள்ளுபடி குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் முதல்கட்ட அறிவிப்பில் ரூ.50,000 வரை சிறுகுறு விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும். பெரு விவசாயிகளுக்கு ரூ.5000 வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதற்கட்ட அறிவிப்பு வெளிவந்தது. 

இதனை எதிர்த்து விவசாயிகள் தீவிரமான போராட்டத்தில் களம் இறங்கினர். விவசாயிகள் சார்பில் முதலமைச்சருக்கு கடிதம் கொடுத்து கடன் வசூலை நிறுத்தி வையுங்கள், நிதிச் சுமையை காரணம் காட்டுவதோடு 60 நாட்களுக்குள் தள்ளுபடி தொகையை முழுமையும் நபார்டு வங்கிக்கு செலுத்த வேண்டும் என்கிற நெருக்கடி இருக்கிறது என்பதை உணர்ந்துள்ளோம். எனவே, விவசாயிகளுக்கு பயனற்ற முறையிலான கடன் தள்ளுபடி அறிவிப்பை கைவிட வலியுறுத்தினோம். கடன் வசூலை நிறுத்தி வைத்து, புதிய கடன் கொடுக்க முன் வாருங்கள். நிதிச் சுமை சீராகும்போது கடன் தள்ளுபடி செய்திட கடிதம் கொடுத்து வலியுறுத்தினோம். 

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக இன்று 16.06.2026ல் வெளியிட்டு இருக்கிற கடன் அறிவிப்பு ரூ.75,000 வரையிலும் சிறுகுறு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும். அதற்கு மேல் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ.35,000-ம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு யானை பசிக்கு சோளப்பொறி போன்றதாகும்.

இதுவரையிலும் தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி வாக்குறுதிகள் பதவி ஏற்ற முதல் கையெழுத்தாக கடன் தள்ளுபடி அறிவிப்பு செய்து விவசாயிகளை பாதுகாத்து வந்துள்ளனர். 

இந்நிலையில் நம்பிக்கை துரோகம் செய்வது போல், சூதாட்டம்போல மாறி மாறி கடன் தள்ளுபடி என்கிற பெயரில் விவசாயிகளை வயிற்றில் அடிப்பதை ஏற்க இயலாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவு வழங்குவது அரசின் கடமையாகும்.

அதற்கான உணவை உற்பத்தி செய்வதை மட்டும் விவசாயிகள் பொறுப்பில் சுமத்துவது எந்த வகையில் நியாயம்? என்பதை கேட்க விரும்புகிறோம். 

எனவே, உணவு உற்பத்தியும் அரசு தன் பொறுப்பில் ஏற்க வேண்டும். காவிரி டெல்டாவில் நடப்பாண்டு குறுவை சாகுபடி முற்றிலும் இழந்துள்ளோம். இதனால் மிகப்பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு வாழ்வதா? சாவதா?என்கிற நிலை உள்ளது. சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் கிடைக்குமா? என்கிற மிகப்பெரிய ஏக்கத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதல்வரின் இந்த கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றும் வகையில் உள்ளது. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சூழல் மிகுந்த வேதனை அளிக்கிறது.

இது குறித்து முதலமைச்சர் மறு பரிசீலனை செய்து தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும்  என வலியுறுத்துகிறோம் என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0