அலட்சிய சிகிச்சையால் குழந்தை மரணம்? தி.மு.க எம்.எல்.ஏ மருத்துவமனை மீது திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் இளம் பெண் புகார்
அலட்சிய சிகிச்சையால் குழந்தை மரணம்? தி.மு.க எம்.எல்.ஏ மருத்துவமனை மீது திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் இளம் பெண் புகார்
கிட்னி முறைகேடு புகாரில் சிக்கிய மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மருத்துவமனையில் முறையான சிகிச்சை வழங்காத காரணத்தால் பிறந்த குழந்தை உயிரிழந்ததாகவும், நியாயம் கேட்க சென்றபோது எம்எல்ஏ கதிரவன் தரப்பில் குண்டர்களை வைத்து மிரட்டுவதாகவும் இளம்பெண் திருச்சி எஸ்பி அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளார். இது குறித்த விபரம் வருமாறு;
திருச்சி மாவட்டம் தாளக்குடி பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி சினேகா (25). கர்ப்பிணியான இவர் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பிரசவத்திற்காக, சமயபுரம் பகுதியில் உள்ள திமுக எம்எல்ஏ கதிரவன் நடத்தும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். மறுநாள் (ஏப்.29) சினேகாவுக்குப் பனிக்குடம் உடைந்துள்ளது. இதுகுறித்து அங்கிருந்த மருத்துவர்களிடம் 2 நாட்களாகத் தொடர்ந்து முறையிட்டும், அவர்கள் எந்தவொரு முறையான நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மே 1-ஆம் தேதி மாலை 5 மணியளவில் செவிலியர்கள் சினேகாவுக்குப் பிரசவ வலி ஏற்படுவதற்கான ஊசியைச் செலுத்தியுள்ளனர். அன்றைய இரவு முழுவதும் சினேகா கடுமையான வலியால் துடிதுடித்துள்ளார். அவரது உடல்நிலையைக் கண்டு பதறிய குடும்பத்தினர், உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாவது குழந்தையை எடுக்குமாறு அங்கிருந்த மருத்துவரிடம் கெஞ்சியுள்ளனர்.
ஆனால் அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மே 2-ஆம் தேதி காலை, குழந்தை தானாக வெளியே வரும் சூழல் ஏற்பட்டபோது, பனிக்குடத்தில் தண்ணீர் இல்லை என கூறி, சினேகாவின் பிறப்புறுப்பு வழியாக மூன்று பாட்டில் தண்ணீரை உள்ளே செலுத்தியுள்ளனர். பயந்துபோன சினேகா, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டதற்குக் கூட அவர்கள் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் (மே.2) காலை 8.15 மணிக்குக் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தையிடம் எந்தவொரு அசைவும் இல்லை. மேலும், பிறந்தது என்ன குழந்தை என்ற விவரத்தைக் கூடக் குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர். குழந்தை எந்த நிலையில் இருக்கிறது என்றும் கூறாமல், விஜய்யிடம் அவசரமாக 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
இதையடுத்து, மே 4-ஆம் தேதி மதியம் 3.30 மணியளவில் குழந்தையின் நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறி, சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், குழந்தையைத் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அனுமதிக்குமாறு கேட்டுப் போராடியும், இறந்த குழந்தையைத் தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகே குழந்தையைப் பெற்றுக்கொண்டு, விஜய் சினேகா தம்பதியினர் வீடு திரும்பியுள்ளனர்.
குழந்தையை இழந்து, மனைவியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்ட வேதனையில் இருந்த குடும்பத்தினர், கடந்த ஜூன் 9-ஆம் தேதி தனலட்சுமி மருத்துவமனைக்குச் சென்று நிர்வாகத்திடமும், மருத்துவர் சூர்யாவிடமும் தங்களது குழந்தைக்கு என்ன நேர்ந்தது என்று நியாயம் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு முறையாக பதில் அளிக்காத மருத்துவமனை நிர்வாகம் நீங்கள் போய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி, அங்குப் பணியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்களை வைத்து மருத்துவமனையை விட்டு வெளியே தள்ளியுள்ளனர்.
இந்நிலையில் தங்களது குழந்தை இறப்பிற்கு மருத்துவமனையின் தவறான சிகிச்சையே காரணம், மேலும் குழந்தையை இழந்து வாடும் எங்களையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கிய மருத்துவமனை நிர்வாகம் மற்றும் எம்எல்ஏ கதிரவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தம்பதியினர் தங்களது குடும்பத்தினருடன் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து குழந்தையின் தாய் சினேகா செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது;
மருத்துவமனையில் முறையான சிகிச்சை வழங்காதது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தபோது அலட்சியமாக நடந்து கொண்டார்கள். மேலும் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிர்வனை நேரில் சந்தித்து மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் என் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தேன். அப்போது அவர் நீ என்னை கேட்டா இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாய் என இளக்காரமாக பேசினார். தேர்தலின்போது கைகூப்பி ஓட்டு மட்டும் கேட்க வந்த எம்எல்ஏ கதிரவன், அவரது மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தை உயிரிழந்த விவகாரம் குறித்து புகார் தெரிவிக்க சென்றால் அவருடைய குண்டர்களை வைத்து எங்களை மிரட்டுகிறார். அந்த மருத்துவமனை வளாகத்தில் 300க்கும் மேற்பட்டோர் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் நின்று கொண்டிருந்தபோது எங்களை மிகக் கேவலமாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்.
ஆகையால் என் குழந்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள் மற்றும் மண்ணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
குறிப்பாக குழந்தை இறந்த விவகாரம் தொடர்பாக "நீ எங்கே சென்றாலும் செல், உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள், நான் எங்கே பார்க்க வேண்டுமோ அங்கே பார்த்துக் கொள்கிறேன்" என எம்எல்ஏ கதிரவன் மிரட்டினார் என தெரிவித்தார்.
ஏற்கனவே கிட்னி திருட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட திமுக எம்எல்ஏ கதிரவனின் இந்த மருத்துவமனையில், மீண்டும் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் பிறந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
1
Sad
0
Wow
0