ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குக - பி.ஆர். பாண்டியன் 

Jun 11, 2026 - 21:05
 0  21
ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குக - பி.ஆர். பாண்டியன் 

ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குக - பி.ஆர். பாண்டியன் 

ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு காவிரி ஆணையம் பொறுப்பேற்க வேண்டும், கர்நாடகாவிடம் இழப்பீட்டுத்தொகை பெற்று தர வேண்டும் என விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த விபரம் வருமாறு ;  

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். சென்ற ஆண்டு 6.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. வரலாற்றில் இல்லாத சாதனையாக அமைந்தது. 

இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையில் 79 அடி தண்ணீர் மட்டுமே உள்ள நிலையில் கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் 19 டி எம் சி தண்ணீரை கர்நாடகம் விடுவிக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தனது கடமை முடிந்து விட்டதாக ஆணையம் நினைக்க முடியாது. உத்தரவை நிறைவேற்றக்கூடிய முழு பொறுப்பும் காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழுவிற்கு உள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழு அலுவலகம் பெங்களூர் நகரத்தில் செயல்பட வேண்டும். 

அன்றாடம் தமிழ்நாடு கர்நாடகத்தில் இருக்கிற அணைகளின் நீர் இருப்பு- நீர் வரத்து குறித்த அனைத்து விபரங்கள் மற்றும் நீர் நிர்வாக முறைகள் ஒழுங்காற்று குழு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என காவிரி நடுவர் மன்றம் தமது இறுதி தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டு அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால், ஒழுங்காற்று குழு தன் கடமையை செய்ய தவறுகிறது. ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவு போடுவது நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு முரணானதாகும். 

எனவே, 19 டி எம் சி தண்ணீரை கர்நாடகாவிடம் இருந்து பெற்றுத்தர வேண்டிய முழு பொறுப்பு ஒழுங்காற்று குழுவிற்க்கு உள்ளது என்பதை உணர வேண்டும்.

நடப்பாண்டு ஜூன் 12-ல் தண்ணீர் திறக்காததால் காவிரி டெல்டா விவசாயிகள் பேரிழப்பை சந்தித்துள்ளனர். இதனை ஈடு செய்வதற்கு கர்நாடகாவிடம் உரிய இழப்பீட்டு தொகையை காவிரி மேலாண்மை ஆணையம் பெற்றுத்தர வேண்டும். 

தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நமக்கான தண்ணீரை ஆணையம் மூலம் கேட்டு பெற்று ஜூன் இறுதியில் மேட்டூர் அணை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் முன்வர வேண்டும்.

இதன் மூலம் குறுவை சாகுபடி முழுமையாக மேற்கொள்ள முடியும் என வலியுறுத்துகிறேன்

காவிரி டெல்டா உட்பட தமிழகம் முழுமையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தி இலவச மின்சாரத்தை நம்பி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போதுநிலவும் வரலாறு காணாத மின்வெட்டால் பல இடங்களில் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளது. 

எனவே, வேளாண்மைக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்குவதற்கு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக வெற்றி கழக கட்சி தனது தேர்தல் அறிக்கைக்கு முரணாக அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடியை திரும்பப்பெற வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சிறுகுறு விவசாயிகளுக்கு 100% கடன் தள்ளுபடியும், பெரும் விவசாயிகளுக்கு 50% கடன் தள்ளுபடியும் செய்திட முன்வர வேண்டும் 

என வலியுறுத்துகிறேன்.

திருநெல்வேலி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கார் குருவை கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு விவசாயிகளுக்கு மத்திய கூட்டுறவு இணையம் பணம் வழங்கவில்லை. இது குறித்து முதல்வரிடம் முறையிட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். 12.06 2026 முதல் 20.06 2026 க்குள் அனைவருக்கும் வங்கி கணக்குகளில் முழுத்தொகையும் வரவு வைக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.

மேற்கண்டவாறு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0