தொல்.திருமாவளவன் முதல்வராவதை எடப்பாடி பழனிசாமி தடுத்தார் - யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி பேச்சு 

Jun 9, 2026 - 18:10
 0  49
தொல்.திருமாவளவன் முதல்வராவதை எடப்பாடி பழனிசாமி தடுத்தார் - யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி பேச்சு 

தொல்.திருமாவளவன் முதல்வராவதை எடப்பாடி பழனிசாமி தடுத்தார் - யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி பேச்சு 

பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாகக் காவல் உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், கடந்த ஆட்சியில் திருச்சி கண்ட்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் தொடர்ந்த வழக்கில், திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர் மற்றும் யூடியூபர் என அறியப்படும் சவுக்கு சங்கர் இன்று ஆஜரானார். இந்த வழக்கு விசாரணையை வரும் 16ஆம் தேதிக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் தெரிவித்ததாவது;

"தேர்தல் முடிவு வெளியானவுடன் திமுக, அதிமுக ஆகிய இரண்டு அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, தவெக ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தன. ஒருகட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை முதல்வராக்க இரண்டு திராவிடக் கட்சிகளின் முக்கிய தலைவர்களும் ஏற்றுக்கொண்டபோது, அதை எடப்பாடி பழனிசாமி தடுத்து நிறுத்தினார்.

யூடியூபர் மரிதாஸ் கைது செய்யப்பட்டது தேவையற்ற ஒரு நடவடிக்கை. கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் இதுபோன்ற செயல்களுக்கான அரசியல் விலையை தவெக ஆட்சியாளர்கள் கொடுக்க வேண்டியிருக்கும். கடந்த ஆட்சிக்காலத்தில் இதுபோன்று என் மீது போடப்பட்ட வழக்கிற்கான விலையைக் கொளத்தூர் தொகுதியில் அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மின்சாரத்துறை போன்ற முக்கியத் துறைகள் அமைச்சர் C.T.R. நிர்மல்குமார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்காலத்திலும், அதிமுக ஆட்சிக்காலத்திலும் நடத்தப்பட்ட ஊழல்களை விசாரிப்பதற்கே தனி அமைச்சர் தேவைப்படும் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையைக் கண்காணிக்கவும், ஊழலைத் தடுக்கவும் அத்துறைக்கென ஒரு தனி அமைச்சரைத் தமிழக அரசு நியமிக்க வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மூன்று மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற பேச்சுக்கள் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக நிதிச்சுமையை ஏற்படுத்த வழிவகுக்கும். தமிழகத்தில் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கவும், போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கவும் முதல்வர் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்காக அவர் முக்கியக் கூட்டங்களை நடத்தியுள்ளார். இந்தச் சிக்கல்களைச் சரிசெய்ய அவருக்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என சவுக்கு சங்கர் பேசினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0