திருச்சி; விடுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்த இளம்பெண் பலி; பாலியல் தூண்டுதலுக்கு வலி நிவாரண மாத்திரைகள்? இருவர் கைது
விடுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்த இளம்பெண் பலி; பாலியல் தூண்டுதலுக்கு வலி நிவாரண மாத்திரைகள்? இருவர் கைது
திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தனது ஆண் நண்பர்களுடன் வலி நிவாரண மாத்திரையை ஊசியில் செலுத்திக் கொண்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு;
திருச்சி மாநகரம் அரியமங்கலம் எம்.ஆர்.மில் தெருவைச் சேர்ந்தவர் யாஸ்மின் (18). இவர் நேற்று (07.06.2026) இரவு 9.30 மணியளவில், அதே பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (19) என்பவருடன் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இன்று மதியம் சுமார் 1.00 மணியளவில், சதாம் உசேன் தனது நண்பரான அரியமங்கலம் தீப்பெட்டி தெருவைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (19) என்பவரை தொலைபேசியில் விடுதிக்கு அழைத்துள்ளார்.
அங்கு வந்த ஷேக் அப்துல்லா, சதாம் உசேன் மற்றும் யாஸ்மின் ஆகிய மூவரும் சேர்ந்து வலி நிவாரண மாத்திரையை ஊசி மூலம் தங்களது உடம்புக்கு ஏற்றிக்கொண்டு உச்சபட்ச மகிழ்ச்சிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் யாஸ்மின் திடீரென மயக்கமடைந்துள்ளார்.
அதனை தொடர்ந்து மயக்க நிலையிலிருந்த யாஸ்மினை சதாம் உசேனும், ஷேக் அப்துல்லாவும் அருகில் இருந்த ஆட்டோ மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சோதித்தபோது யாஸ்மின் சுயநினைவற்ற நிலையில் இருந்ததை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி யாஸ்மின் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து வந்த கன்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார், யாஸ்மின் தங்கியிருந்த தனியார் விடுதி அறையில் சோதனை நடத்தினர். அங்கிருந்து 70 டாபெண்டாடோல் (Tapentadol) வலி நிவாரண மாத்திரைகள், ஒரு சிரின்ஜ், மாத்திரை கலக்கப்பட்ட நீருடன் கூடிய 2 டீ கப்புகள், ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த யாஸ்மினின் தாயார் சகிலா பேகம் அந்த பகுதியில் போதை மாத்திரைகளை வாங்கி விற்று வருவதாகவும், அவரிடமிருந்தே யாஸ்மின் இந்த மாத்திரைகளை எடுத்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகச் சதாம் உசேன், ஷேக் அப்துல்லா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி அரியமங்கலம் பகுதியில் அதிக அளவு போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த மாத்திரைகள் இளம் பருவத்தில் இருக்கும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் இடையே கொடுக்கப்பட்டு உச்சபட்ச சுகத்துக்கு தள்ளப்படுவதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதில் அப்பகுதி மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் உள்ள இளம் வயது நபர்களுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது; உயிரிழந்த பெண் பாலியல் தூண்டுதலுக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியவரும். இந்த மாத்திரைகள் இணைய வழியில் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்த பெண்ணின் தாயாரை விசாரணைக்கு உட்படுத்தி வருகிறோம் என்றனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
1
Sad
0
Wow
0