திருச்சியில் சிறுமிக்கு மது ஊற்றி பாலியல் அத்துமீறல்? வாகன ஓட்டுனருக்கு தர்ம அடி 

Jun 4, 2026 - 11:14
Jun 4, 2026 - 12:48
 0  96
திருச்சியில் சிறுமிக்கு மது ஊற்றி பாலியல் அத்துமீறல்? வாகன ஓட்டுனருக்கு தர்ம அடி 

திருச்சியில் சிறுமிக்கு மது ஊற்றி பாலியல் அத்துமீறல்? வாகன ஓட்டுனருக்கு தர்ம அடி 

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. கடந்த 12 நாட்களில் மட்டுமே 30 -க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

அந்தவகையில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.  

சிவகங்கையைச் சேர்ந்த மாரீசெல்வன் (43) என்பவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று சிவகங்கையிலிருந்து திருச்சி காந்தி மார்க்கெட் கல்மந்தை காலனி குடியிருப்பில் வசிக்கும் ஆதிரா (எ) ஆதி தமிழன் என்கிற திருநங்கை மற்றும் அவரது நண்பர்களை பார்ப்பதற்காக வந்துள்ளார்.

அப்போது ஆதிராவின் தங்கையை நேற்று மாலை 5 மணி அளவில் கல்மந்தை காலனியிலிருந்து, மாரி செல்வன் தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இரவு சிறுமியை திருச்சி கீழப்புலிவார்டுரோடு பகுதியில் காரில் இருந்து இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது சிறுமி போதை தலைக்கேறிய நிலையில் சுயநினைவின்றி கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்களும் அப்பகுதி காவலர்களும் உடனடியாக அவரை மீட்டு, திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் மாரிசெல்வனை அப்பகுதியினர் தேடி வந்த நிலையில், இரவு நேரத்தில் கல்மந்தை காலனிக்கு திருநங்கை ஆதிராவை சந்திக்க வந்தபோது அவரைப் பிடித்துத் சரமாரியாகத் தாக்கினர். இதில் மாரி செல்வனுக்கு மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருநங்கை ஆதிராவின் சகோதரி திருச்சி அரசு மருத்துவமனையில் சுயநினைவின்றி தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் ஏதேனும் இழைக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து  கோட்டை காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். தொடர்ந்து சிறுமியை பார்க்க அனுமதிக்க வேண்டும், குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0